சென்னை, அக். 01 –
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக கடந்த 27ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்த போது, அங்குள்ள புதரில் மேடவாக்கம் தாகூர் தெருவை சேர்ந்த இளம் ரவுடி பிரைட் ஆல்வின் (22) வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
பிரைட் ஆல்வினுடன் சென்ற பெருமாள் என்பவர் (23) வெட்டுகாயங்களுடன் அங்கிருந்துள்ளார். உடனடியாக போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து கிடந்த இளம் ரவுடி பிரைட் ஆல்வின் உடலை மீட்டு போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், நேற்று பள்ளிக்கரணை அழகிரி தெருவை சேர்ந்த கிங்ஸ்லி பவுல் (22), பிரவீன் (20), பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த அற்புத தேவசீலன் (27), இம்மானுவேல் தெருவை சேர்ந்த சிவா (20) மற்றும் பெருங்குடியை சேர்ந்த சிவக்குமார் (21) ஆகிய ஐந்து நபர்கள் கொலை வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த வாரம் பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த மாணவருக்கும் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவனுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அப்போது மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவன் இளம் ரவுடி பிரைட் ஆல்வின் வீட்டின் அருகில் வசிப்பதால் பிரைட் ஆல்வினை தொடர்பு கொண்டு கல்லூரியில் நடந்த பிரச்சினை குறித்து கூறியுள்ளார்.
இதனால் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் தலையிட்ட இரண்டு ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினருக்கும் பொதுவானவராக இருந்து செயல்பட்ட பிரவின் என்பவர் சூழ்ச்சியாலும், இளம் ரவுடியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாமலும் தனை தீர்த்துக்கட்டி விடுவான் என்ற அச்சத்தாலும் அஜய் என்ற ரவுடிக்கும்பல் பிரைட் ஆல்வின் என்ற இளம் ரவுடியை வெட்டிக் கொலை செய்யத் திடமிடப்பட்டு பிரவின் மூலமாக கொலை நடந்த சம்பவ இடத்திற்கு பிரைட் ஆல்வினை வர வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த கிங்ஸ்லி பவுல், பிரவீன், அற்புத தேவசீலன், சிவா, சிவக்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அஜய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.




















