திருவாரூர், செப். 18 –
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஜூரதேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பாரபட்சமின்றி ஜூரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் ஜூரம் பரவி வருகிறது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேகமாக பரவி வரும் ஜூரத்தை தடுக்கவும், ஜூரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும். பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஜூரத் தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மூன்று முகம், மூன்று கால்களை உடைய அருள்மிகு ஜூரதேவர் சுவாமிக்கு திரவியம், மஞ்சள், அரசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜூரதேவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மிளகு, சீரகம் கலந்த சாதமும், மிளகு ரசமும் நிவேத்யம் செய்யப்பட்டு பஞ்சார்த்தி தீபாரதனை நடைப்பெற்றது.