காஞ்சிபுரம், செப். 05 –
காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ தூதப் பெருமாள் சந்நிதி தெரு உட்பட நகரில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 31 ஆம் தேதி புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனையடுத்து ஆக.31 ஆம் தேதி முதல் செப்.4 ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி காலை,மாலை இரு வேளைகளிலும் வழிபாடுகளும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டன. பின்னர் இந்து முன்னணி சார்பில் அங்கிருந்து விஜர்சன ஊர்வலம் மங்கள மேள வாத்தியங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் புறப்பட்டது.
விஜர்சன ஊர்வலம் தொடக்க விழாவிற்கு இந்து முன்னணி காஞ்சிபுரம் கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி தலைமை வகித்தார். பாரதிதாசன் பள்ளியின் தாளாளர் எம்.அருண்குமார், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனுமன் மாதாஜி ஆசியுரை வழங்கி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். விழாவில் ஆர்எஸ்எஸ்.காஞ்சி மாவட்ட தலைவர் ரா.கோதண்டம், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சி.ஆர்.ராஜா, மாவட்ட செயலாளர் ஜெ.முரளி, பாஜக பிரமுகர் டி.கணேஷ் ஆகியோர் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ரங்கசாமி குளத்திலிருந்து காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி காந்திசாலை,காமராஜர்சாலை,கச்சபேசுவரர் கோயில் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் வந்து நிறைவு பெற்றது. இதனையடுத்து அனைத்து விநாயகர் சிலைகளும் சிறு சரக்கு வேனில் இருந்தபடியே மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்து சென்று விஜர்சனம் செய்யப்பட்டது.