திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கடந்த இருதினங்களாக இம்மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவைக்கு தயராக இருந்த நெற் பயிற்கள் நீரில் மூழ்கியதால் பலகோடி மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.
மேலும், அதுக்குறித்து எந்த ஒரு அரசு அலுவலர்களும் வந்து பாதிப்புகளை பார்வையிடவில்லை என குற்றம் சாட்டினார்கள். மேலும் அது தொடர்பாக அரசு அலுவலர்கள் இழப்பீடு கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் அளவிலான இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக துறை சார்ந்த அலுவலரை அழைத்து உடனடியாக ஆகாய தாமரை அகற்றி சின்ன ஓடை வடிகாலை தூர்வாரி கொடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினார்கள் அதற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தினார்.
மேலும் வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய மீன்கள் தரம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது அதனை தடை செய்ய வேண்டும் என்று விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு மாவட்ட ஆட்சிச்சலைவர் நாம் தடை செய்ய முடியாது. ஆனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கொண்டு அந்த மீன்கள் தரம் உள்ளதா, இல்லையா என சோதனை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்து விட்டு கடந்த கூட்டத்தில் சோதனை செய்ய சொல்லி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
அது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டறிந்தார். அதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார். சற்று கோபப்பட்ட மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் ஜி.சேதுராமன் கூட்ட முடிவிற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் மாத மாதம் நடைப்பெறும் ஒவ்வொருக் கூட்டத்திலும் விவசாயிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும் கோரிக்கை என்பது மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரப்படாத சி.என்.டி என கூறப்படும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி வந்துளோம். ஆனால் அரசின் மெத்தனப்போக்கினால் அவ்வாய்க்கால் தூர்வாரப்படாது குறிப்பாக ஆதம்பார், நெமிலி போன்ற பகுதிகளில் நெற் பயிரிடப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மழை நீர் புகுந்து விவசாயிகள் மீள முடியாத பெருத்த சேதத்தினை ஏற்படுத்திவுள்ளாதகவும், பாதிப்புகள் குறித்து எந்தவொரு அரசு அலுவலர்களும் வந்து பார்வையிடவில்லை என்பது விவசாயிகளிடம் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்திவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வயலில் தேங்கியிருக்கும் நீரினை வெளியேற்ற விவசாயிகள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இரு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே இவ்வளவு பாதிப்பு என்றால் மாவட்டம் முழுவதும் எவ்வளவு இருக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், மேலும் உடனடியாக வடிகால் வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் (சி.என்.டி. வாய்க்கால்களை) தூர்வார வேண்டும் எனவும் பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பேட்டி ஜி. சேதுராமன் தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கம் திருவாரூர்