கும்பகோணம், ஆக. 24 –

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிப்பட்டனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் வீடாகும் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் தமிழ் வருட தேவதைகள் அறுபது பேரும், அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகைத் தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம் உள்ளது.

கட்டுமலை கோயிலான இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றது. இத்தலத்தில்தான் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் மந்திரப் பொருளை முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் சுவாமிக்கே நாதன் ஆனார் இதனால் இங்கு முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றி வணங்கப்பெறுகிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதனை முன்னிட்டு, இன்று 7ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தில், சம்வஸ்திரா அபிஷேகம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, புனிதநீர் நிரப்பிய கடங்களை ஸ்தாபித்து, பல்வேறு விதமான மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்த்து, அதன் பூர்ணாஹஹூதிக்கு பிறகு, மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கடங்கள் புறப்பாடாகி, மலை கோயிலை சென்றடைந்து, அங்கு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு, மகா அபிஷேகம் நடைபெற்றது, இக்காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான முருக பக்தர்கள் சாமியை மனமுருகி வழிப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here