கும்மிடிப்பூண்டி, ஆக. 22 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரலட்சுமி அம்மன் ஆலயத்தின் தீ மிதி நிருவிழா நடைப்பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு வடிவங்களில் அருள் பாலித்தார்.
அத்திருவிழாவின் 10 வது நாளான இன்று, ஸ்ரீவீரலட்சுமி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அதனை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இத்திருவிழாவை காண கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் இருந்து திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.