புதுக்கோட்டை, ஆக. 03 –
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில் வைக்கோல் ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கிறது. இத்துடன் நீரையும் நேரடியாக வயலில் பாய்ச்சும் போது, வைக்கோல் அழுக துவங்குகிறது. இந்த நேரத்தில் வாத்து வளர்ப்பவர்கள் 3000 வாத்து குஞ்சுகளுடன் 30 நாள் வயதுடைய வாத்துக்களை நெல் வயலில் விடுகின்றனர்.
இவ் வாத்துக்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மேய்க்கப்படுகிறது. 30 நாள் வாத்து குஞ்சுகள் உரிய தீவனம் அளிக்கப்பட்டு தேவையான தடுப்பூசிகள் இடப்பட்டு வளர்ப்பதற்காக மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் வயல்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
20 லிருந்து 30 நாள் வரை வாத்துக்கள் வயலில் மேய்க்க விடப்படுகிறது. வாத்துக்கள் கொட்டிலில் அடைக்கப்படும் வரை தொடர்ச்சியாக நீருக்குள்ளும் சேற்றிலும் வாயை விட்டு தொடர்ந்து கொத்திக் கொண்டே இருக்கின்றன.
இதன் மூலம் நெல் வயலில் உள்ள களை விதைகளை அவைகள் உண்ணுவதோடு இளம் களைசெடிகளையும் கொத்தி தின்றுவிடும். மேலும் சேற்றில் இருக்கும் புழுக்களையும், தவளை மற்றும் சிறு சங்கு பூச்சிகளையும் இவை பிடித்து உண்ணுகின்றன.
இதனால் வாத்து மேய்க்கப்படும் வயல்களில் பூச்சிகளின் தொல்லை மற்றும் களைகளின் தொல்லை இருக்காது. அதனால் களை மற்றும் பூச்சி கட்டுப்பாடு செலவினமும் விவசாயிக்கு குறைகிறது.
இது மட்டுமின்றி வாத்துகள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதால் அவை இடும் எச்சமும் மண்ணில் சேர்ந்து மண்ணின் கரிமச்சத்தினை அதிகரிக்கிறது.
இது பயிருக்கு ஒரு நல்ல சத்துள்ள இயற்கை உரமாக அமைகிறது. மேலும், இது இயற்கை சாகுபடிக்கு முதல் படியாகவும் அமைகிறது. தொடர்ந்து வயலில் கிடக்கும் வைக்கோல்களையும் மிதித்து விடுவதால் மண்ணின் காற்றோட்டமும் அதிகரித்து, வைக்கோல் விரைவில் மக்கி விடுகிறது.
வாத்துகளை முட்டாள் என்று சொல்லுவார்கள் ஆனால் வாத்துகள் விவசாயிகளின் அடிப்படை பணியாட்களை போல சிறந்த பணிகளை செய்கின்றன. ஆடு மாடுகள் கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் வழங்க வேண்டும். ஆனால் வாத்து கிடை போடுவதற்கு விவசாயிகள் பணம் ஏதும் வழங்கத் தேவையில்லை,
அதைப்போன்று. வாத்து வளர்ப்பவர்கள் வயலில் மேய்ப்பதன் மூலம் இயற்கையான முறையில் மூன்று மாதத்தில் தங்களுடைய வாத்துக்களை செயற்கை தீவனம் இன்றி இயற்கையாக வளர்த்துக் கொள்கின்றனர்.
வயலின் தன்மைக்கேற்ப வாத்து வளர்ப்பவர்கள் வாத்துக்களை தேவைப்படும் விவசாயி வயல்களுக்கு வண்டிகள் மூலம் மாற்றிச் செல்லும் செலவு மட்டுமே. 3000 வாத்து குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் மருந்து, போக்குவரத்து செலவினம் உட்பட 2 லட்சம் வரை செலவாகிறது. வளர்ந்த வாத்துகளை ரூபாய் 250 முதல் 300 வரை விற்பனை செய்து விடலாம். இது வாத்து வளர்ப்பவருக்கான பலனாகும்.
விவசாயிக்கு செலவில்லாத பூச்சி மருந்து, ரசாயனமற்ற களை கட்டுப்பாடு, பூச்சி கட்டுப்பாடு மற்றும் இயற்கை உரம் செலவின்றி கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கான பலனாகும்.
எனவே விவசாயிகள் தற்சார்பு முறையில் செலவு இன்றி சாகுபடி செய்ய வாத்துகளின் வரத்தும் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.