கும்பகோணம், ஜூலை. 24 –
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் வீதம் மூன்று குடும்பத்திற்கு மூன்று லஞ்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சி நாதனுக்கு ரூ 35 ஆயிரம் வழங்கினார்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைக்களில் மழைநீர் நிரம்பி அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி விட்டது.
அதனால் மேட்டூரில் இருந்து கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் காவேரி பாசனத்துக்கு போக மீதமுள்ளவை கொள்ளிடம் ஆற்றில் பிரித்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த எச்சரிக்கையையும் மீறி கடந்த ஜூலை 18 திங்கள் கிழமையன்று அணைக்கரை அருகே மதகுசாலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கொளஞ்சிநாதன் (வயது 34) கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24) சேகர் மகன் மனோஜ் (வயது 23) மற்றும் கார்மேகம் மகன் ராஜேஷ் (வயது 22) ஆகிய நான்கு இளைஞர்கள் கடந்த 18ம் தேதி நள்ளிரவு கொள்ளிடம் ஆற்றுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்மட்டத்தால் அவர்கள் கரை திரும்ப முடியாத நிலை உருவானது.
ஆனால் ஆற்றின் நடுவே உள்ள உயரமான மண் திட்டு ஒன்றில் பாதுகாப்பாக ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டனர். பின்னர் அவர்களது செல்போன் மூலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் கரையோரத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து 4 இளைஞர்கள் மணல் திட்டில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஆற்றில் அடித்து செல்லபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஆற்றில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது அப்போது அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் கொளஞ்சிநாதன் மட்டும் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள மூன்று பேரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மனோஜ் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அப்பு என்கிற ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மனோஜ், ஆகாஷ் மற்றும் அப்பு என்கிற ராஜேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் விதம் 3 குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் பணமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு 35 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது உடன் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை, அவைத் தலைவர் கலியமூர்த்தி, மிசா மனோகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாலகுரு, இளவரசி, இன்பத்தமிழன், மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.