கும்பகோணம், ஜூன். 13 –
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் ஆலயத்தில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் கிரியா சக்தி ரூபமாகவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என விளங்கும் இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும், ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்.
இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, 10ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை மூலமந்திர ஹோமம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹு_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, தசமி திதி, அனுஷ நட்சத்திரம், சிம்ம லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இக் கும்பாபிஷேக விழாவில் பிள்ளையாம் பேட்டை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருப்புசாமி கோவில் தெரு கிராம வாழ்குடி மக்கள், கிராம நாட்டாமைகள் ஆலய பொறுப்பாளர்கள் தமிழ்தாய் இளைஞர் நற்பணி மன்றம் மகளிர் சுய உதவி குழு மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





















