கும்பகோணம், ஜூன். 04 –

கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று  நடைபெற்றது.

கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு,  காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள், காவல் நிலையங்களில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், அப்போது பலர் தஞ்சாவூருக்கு சென்று காவலர்களுக்கு உள்ள அங்காடியில் பல்பொருட்கள் வாங்கி வரவேண்டியுள்ளது. இதனால் நேர விரயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியை போல் கும்பகோணம் உட்கோட்டத்தில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர்  அலுவலக வளாகத்தில் பல்பொருள் அங்காடி திறப்பு விழா காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை, பட்டீஸ்வரம் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

இதுபற்றி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் கூறுகையில், திருச்சி மத்திய மண்டல தலைவர் (ஐஜி)., பாலகிருஷ்ணன் ஆலோசனைப்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பல்பொருட்கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்களுக்கு சனிக்கிழமை தோறும் பல்பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். இதற்காக வாரந்தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காவலர்கள் வாட்ஸ் அப் குழுவில்  தங்கள் பேட்ஜ் எண்ணை பதிவு செய்து பொருட்களை ஆர்டர் செய்துவிட்டால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வந்து பொருட்களை வாங்கி செல்லலாம்.

இப்பகுதியில் உள்ள காவலர்கள் வெளிகடைகள், சூப்பர்மார்க்கெட், மால்களில் சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்த்து காவலர்களுக்கான  பல்பொருள் அங்காடியில் அதிகளவு பொருட்கள் வாங்கினால் விற்பனையை பொருத்து விரைவில் தனியாகவே குடந்தையில் காவலர்களுக்கான  பல்பொருள் அங்காடி தொடங்கிட வாய்ப்பு உருவாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன், சுவாமிமாலை காவல்துறை ஆய்வாளர் (பொ) பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here