கும்பகோணம், மே. 29 –
கும்பகோணம் அப்புக்குட்டி தெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மனுடன் கேரள ஜென்டை மேளம் முழங்க திருக்கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
கும்பகோணம் அப்புக்குட்டிதெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் சிறப்பு சக்தி வாய்ந்த கோயிலாகும். இத்திருக்கோயிலில் வைகாசி மாதம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 27ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, ஆண்டாள் அலங்காரம், காதம்பரி அலங்காரம், குங்குமம் அலங்காரம், பச்சையம்மன் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நடைபெற்றது. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்காண பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி யானை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்தடைந்து. சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்று 29ம் தேதி ஞாயிறு 69ம் ஆண்டு பால்குட கோடாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.