கும்பகோணம், மே. 15 –
கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் உள்ள பாரதி நகர் மகேஸ்வரி அம்மன் வாழவந்தஅம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சித்திரை திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து வந்தனர்.
மாதுளம் பேட்டை தெரு பாரதி நகரில் உள்ள மகேஸ்வரி அம்மன் வாழவந்த அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 29ஆம் தேதி கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.
சித்திரை திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த 13ஆம் தேதி முத்தங்கி சேவை மாவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்று முக்கிய நிகழ்ச்சியான இன்று அரசலாறு கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் சாமி வேடம் அணிந்து யானைமேல் பால்குடம் வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி பொங்கல் பானை எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. அதனைத் தொடர்ந்த மகேஸ்வரி அம்மன் வாழவந்த அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மதியம் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் அப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை அரசலாற கரையிலிருந்து முளைப்பாரி எடுத்து வருதல் சந்தன காப்பு அலங்காரமும் சிறப்பு தீபாராதனை அதனைத்தொடர்ந்து மகேஸ்வரி அம்மன் வாழவந்த அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் சிறப்பு அலங்காரமும் அதனைத் தொடர்ந்து நாளை காப்பு அவிழ்த்தல் முளைப்பாரி மகாமக குளத்தில் கரைதல் மற்றும் மாலை நவக்கிரக ஹோமத்துடன் இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தெருவாசிகள் நாட்டாமைகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.























