கும்பகோணம், மே. 01 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களையும் சேர்த்து ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி,கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் தினமான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு திருவிசநல்லூர் ஊராட்சியில் சிவன் கோவில் அருகில் கிராம சபை கூட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவிடைமருதூர் ஒன்றியம் பெரும் தலைவர் சுபா திருநாவுக்கரசு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி கே எம் ராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள்,பொது நிதி செலவின விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படடன. குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள், கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதாரம், பள்ளி, அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இதனால்,பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை வசதி குடிநீர் வசதி தொடர் மின்வெட்டு குறித்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையை எழுப்பினார்கள்.























