பூந்தமல்லி, ஏப். 26 –

பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, நசரத்பேட்டை, கோபுரசநல்லூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், சீனிவாசபுரம், பரணிபுத்தூர், சின்னப்பணிச்சேரி, மவுலிவாக்கம், தெள்ளியார்அகரம், கொளுத்துவான்சேரி, அகரமேல், வானகரம், சென்னீர்குப்பம், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, கோலப்பன்சேரி, பிடாரிதாங்கல், பானவேடு தோட்டம், பாரிவாக்கம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் இரண்டு கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை எல்லையாகக் கொண்டு மண்டலம் ஒன்றில் திருவேற்காடு நகராட்சி மற்றும் 8 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மண்டலம் இரண்டில் பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துவிதமான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.  இந்த நிலையில் பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் பூந்தமல்லியில் தனியார் மண்டபத்தில்  நேற்று நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், மாங்காடு நகர் மன்ற தலைவர் சுமதி முருகன்,  ஊராட்சி மன்ற தலைவர்கள்,  நகராட்சி ஆணையாளர்கள்,  அதிகாரிகள், கவுன்சிலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், நகர்நல சங்கத்தினர்,  பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இதில் பூந்தமல்லி தி மு க நகர செயலாளர் ஜி. ஆர். திருமலை, மாவட்ட பிரதிநிதி சுதாகர், அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஜாவித் அகமது, கே.ஜி.டி.கவுதம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெமிலா பாண்டுரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here