கும்பகோணம், ஏப். 12 –
கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் கும்பகோணம் மன்னார்குடி புது பாலம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து கும்பகோணம் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை, திட்டமிட்ட கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட கும்பகோணம் பகுதியை சேர்ந்த ராஜா என்கின்ற கட்ட ராஜா, மாரியப்பன், ஆறுமுகம், செல்வம், மனோகரன், ஆகியோரை கைது செய்து இந்த விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மனோகரன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர்.
ராஜா என்கின்ற கட்ட ராஜா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சாட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் காவல்துறை மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி பெஞ்சமின் வழங்கினார்.
இதில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜாவிற்கு சாகும்வரை தூக்கு தண்டனையும் மூன்றாவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகளான ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.