திருவேற்காடு, ஏப். 10 –
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பை, கேரி பேக் போன்றவற்றை வியாபாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடை மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சியில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டத்தை” அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மீண்டும் மஞ்சப் பை என்பதை வலியுறுத்தும் விதமாக, பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களை எரிப்பதால் ஓசோன் படலமும் பாதிக்கப்படுகிறது. இதனால் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சு மூலம் 21 விதமான நோய்கள் மனிதர்கள், தாவரங்கள், கால்நடைகளுக்கு ஏற்படுகின்றன. தமிழக முதலமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக தொலைநோக்குப் பார்வையுடன், மீண்டும் மஞ்சப் பை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சீத்தாரம் யெச்சூரி பேசும் போது, தமிழக முதல்வரின் திராவிட மாடல் திட்டத்தை இந்தியா முழுவதுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பிரதமரை உருவாக்க வேண்டும் என்றால் அது தென் தமிழகத்தில் உள்ள நமது முதல்வராகத்தான் இருப்பார். தமிழக முதல்வருக்கு விரைவில் பெரிய பதவி காத்திருப்பதாக அப்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.ஈ.கே. மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.





















