கும்பகோணம், ஏப். 07 –
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் (வயது 49) இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி லதா கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் அண்டக்குடி மெயின்ரோட்டில் சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அருகில் உள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையில் இரவு நேர காவலராக பணிபுரிந்து வரும் தாராசுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பவர் அசோக்குமார் நடத்தி வரும் ஹோட்டல் அருகே தங்கி இருந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அன்பழகன், தினசரி அசோக்குமார் ஹோட்டல் அருகே சிறுநீர் கழித்து வந்துள்ளார். இதனை அசோக்குமார் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என தெரிய வருகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் ஹோட்டல் அருகே அன்பழகன் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது இதனை அசோக்குமார் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அசோக்குமார் மற்றும் அன்பழகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகில் கிடந்த கடப்பாறைக் கம்பியை எடுத்து அசோக்குமாரின் தலையில் அடித்ததில் மயங்கி விழுந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதாகிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஹோட்டல் உரிமையாளர் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஹோட்டல் உரிமையாளரை இரும்புக் கடப்பாரையால் அடித்துக் கொன்ற இரவு காவலர் அன்பழகனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















