திருவள்ளூர், மார்ச். 22 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து, மழைநீர் சேகரிப்பதின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேலும், அவர்களிடம் உலக தண்ணீர் தினம் இன்று கடைப் பிடிக்கப்படுகிறது எனவும், இத்தினம் 1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடி வருகின்றோம். நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும், என்றும் நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நாம் நன்கு அறிந்ததே பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலபரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடு நீர்பரப்புதான். ஆனால் இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் ஆனால் உரிய முறையில் நீரை மறு சுழற்சி செய்வதால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர். நீரியல் ஆய்வாளர்கள். இதுமட்டுமன்றி அன்றாடம் செய்யும் சிறு சிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். உதராணமாக பல்துலக்கும் போது குழாயை அடைத்து விட்டு பல் துலக்கலாம். இதன் மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். அதுப்போன்று, தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாய் திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அடைப்பதும் தண்ணீர் சேமிப்புக்கு வழி வகுக்கும் என்றார்.
தொடர்ந்து ஆட்சித்தலைவர் தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், புதிதாக வீடு கட்டும் போது மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் கொள்வதோடு, சேமிக்கவும் முடியும் என்றார் நாம் உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைப்பிடிக்காமல் ஒவ்வொருநாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தாலயாய கடமையாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று குடிநீர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஆழ்துளை கிணறு மற்றும் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் உள்ள நீர் மாதிரிகளை சேகரித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் செயல்முறை விளக்கம் வாயிலாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர்கள் க.வேல்முருகன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ராஜவேல் ஊரக வளர்ச்சி, உதவி நிர்வாக பொறியாளர் அமலதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.






















