திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை வட்டம் சாவல்பூண்டி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சுந்தரேசன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 35க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை ஆட்சியர் வெங்கடேசன் பயனாளிகளுக்கு முழு புலம் நத்தம் பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் குறுவட்ட நில அளவர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மங்கிதம், கிராம நிர்வாக அலுவலர்கள் ரூபா, பாலகிருஷ்ணன், கிராம உதவியாளர்கள் ஏ.செல்வகுமார், ஜெயந்தி, மஞ்சுளா, அசோக் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து மனுக்களை வழங்கினர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ராகுல் நன்றி கூறினார்.