ஆவணப்படம் ..
திருவண்ணாமலை மார்ச்.14-
கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன் மலையிலுள்ள கீழ்வலசை மேல்வலசை அக்கறை பட்டி கிராமங்களில் களஅய்வு மேற்கொண்டோம். கீழ்வலசை கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் உள்ள இடத்தில் பல்வேறு காலங்களை சேர்ந்த சிலைகள் நடுகற்கள் சிற்பவேலைபாடுகளுடன் கூடிய பலகை கற்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளை மக்கள் வணங்குகின்றனர். இதேபோல் அரசினர் உண்டு உறைவிட பள்ளி அருகே உள்ள விநாயகர் கோவிலில் 20க்கும் மேற்பட்ட கற்கால கருவிகளை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேல்வலசை கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் இரும்பு கருவிகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட தற்கால கருவிகள் உள்ளன. மேலும் மலைபகுதியில் 100க்கும் மேற்பட்ட பெரும் கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் உள்ளன. 4 புறமும் செங்குத்தாக கற்களை வைத்து அதன் மீது பெரிய பலகை கல்வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசையில் உள்ள கல்லில் வட்டவடிவு துளை உள்ளது. இந்த கற்திட்டை உள்ளே சிலையை வைத்து பீமாரப்பட்டி கிராம மக்கள் வழிவழியாக வணங்கி வருகின்றனர்.
இந்த கற்திட்டைகள் இன்றுவரை கிராம மக்களின் வழிபாட்டில் உள்ளன. இவ்விடத்தில் இரும்பை உருவாக்கி கருவிகளை செய்வதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பழமைகளை பாதுகாப்பு வேண்டும் என்றனர்.

















