கும்பகோணம், மார்ச். 09 –
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருக்கும் சிறப்பு ஸ்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயிலின் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கோயிலில் உள்ள பெரிய கொடிமரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சுவாமி அம்பாள் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சண்டிகேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற 13ஆம் தேதி சகோபுர தரிசனமும் 15ஆம் தேதி திருக்கல்யாண பிரம்மோற்சவம் 16 ஆம் தேதி ரதா ரோஹணமும் 17 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் 18ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நிகழ்வும் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதி ஸ்ரீ சரபேஸ்வரர் ஏகதின உற்சவமும் கோடி அர்ச்சனையும் சரப மூர்த்தி சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.