சென்னை, ஊன. 20 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு 8   இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வரும் செல்வன் பரத் சுப்ரமணியன், 2013-ஆம் ஆண்டு முதல் தனது ஐந்தாவது வயதிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக விளையாடிய செல்வன் பரத் சுப்ரமணியம்

2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும், 2022-ஆம் ஆண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

செல்வன். பரத் சுப்ரமணியத்திற்கு 2019-ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 3 இலட்சம் ரூபாயும், 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றமைக்காக 5 இலட்சம் ரூபாயும் சேர்த்து, மொத்தம் 8 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., பயிற்சியாளர் ஷியாம் சுந்தர் மற்றும் செல்வன் பரத் சுப்ரமணியத்தின் பெற்றோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here