டெல்லி, ஜன. 18 –
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்தார்.
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த தென்மண்டலத்திற்கான பிரதம மந்திரி விரைவு சக்தி குறித்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், மத்திய ,மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பும், தகவல் தொடர்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற ஆலோசனைகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பன்னோக்கு மாதிரி இணைப்பு மக்கள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்து தொடர்பை அதிகரிக்கும் என்று கூறினார். புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் மேம்பாலத்திட்டங்கள், ஹெலிகாப்டர் சேவைகள், விமான சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மகாராஷ்ட்ரா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொண்டன. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங்கும் இதில் பங்கேற்றார்.