சென்னை, ஜன. 6 –
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி விக்னேஷ் (18), அவரது அண்ணன் பழனிவேல், உடன் படிக்கும் நண்பன் நிஷாந்த் ஆகியோர் பி.காம் படித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் நிஷாந்த் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததால் அதே கல்லூரியில் படித்து வரும் ஜானி என்பவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நிஷாந்த் உடன் படிக்க்க்கூடிய சக்தி விக்னேஷ், பழனிவேலிடம் கூறியதை தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து ஜானியிடம் அடித்தது குறித்து கேட்டபோது இருதரப்பினர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஜானியுடன் 10 மாணவர்கள் இருந்த நிலையில் நிஷாந்த் தரப்பில் மூன்று பேர் மட்டுமே இருந்த நிலையில் சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களும் தாக்கிகொண்டனர். பின்னர் மூவரையும் 10 பேர் கொண்ட ஜானி தரப்பு மாணவர்கள் இடைவிடாது தொடர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் சக்தி விக்ணேஷ் மற்றும் அவரது சகோதரர் பழனிவேல் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திய ஜானி தரப்பு மாணவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஷாலிமர் கார்டன் பகுதிக்கு அழைத்துச் சென்று கட்டிவைத்து அடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பிய சகோதர்கள் இருவரும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் 147, 341, 294(b), 323, 506(i)IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜானி மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், விக்னேஷ், லோகேஷ்வரன், ஜெகன்நாத் மற்றும் இரு இளம்சிறார் ஆகியோரை கைது செய்த போலீசார் எதிர்தரப்பான சகோதரர்கள் சக்தி விக்னேஷ், பழனிவேல் ஆகிய இரண்டு பேர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதில், இளஞ்சிறார் இருவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் விடுவிக்கப்பட்டதாக துரைப்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.