திருவண்ணாமலை டிச.27-
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஜி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்ட செயலாளர் எஸ்.ரவி வரவேற்றார். வட்ட இணை செயலாளர் ஆர்.கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பெருமாள், முன்னாள் மாநில தலைவர் எம்.அன்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட தலைவர் என்.சங்கர், மாவட்ட செயலாளர் கே.ரமணன், மாவட்ட பொருளாளர் எம்.மெய்யழகன் அவர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் ஜி.அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உள்வட்ட தலைவர்கள் பி.அன்பரசு, எம்.அண்ணாமலை, ஏ.ஆனந்தன், எஸ்.ரவி, இ.கருணாநிதி, எம்.சின்னசாமி, எச்.கோவிந்தசாமி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும், இரவு காவல் பணி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட பொருளாளர் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.




















