ஆவணப்படம் ;
திருவண்ணாமலை டிச.27-
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச் செயலாளர் டி.என்.ஜி.சங்கரன், மாநிலப் பொருளாளர் ஆர்.நரசிம்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் 150 பேர்களுக்கு சேவா பூஷன் என்ற சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முதன்மை வழங்கும் தமிழக அரசினுடைய முடிவினை இப்பொதுக்குழு பாராட்டி வரவேற்கிறது. மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழகத்திலும் அமல்படுத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்வது, நீர் ஆதாரத்தினை பெருக்கி சிறந்த முறையில் பயன் பெற்றிடும் வகையில் தென்னிந்திய நதிகளை இணைத்திட விரைந்து நடவடிக்கை எடுத்திடுமாறு மத்திய அரசினையும், மாநில அரசையும் கேட்டுக் கொள்வது, மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பயன் அளித்திடும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது, கேரள அரசைப் போல் தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஓர் தனி நல வாரியம் அமைத்திட தமிழக அரசை கேட்டுக் கொள்வது, அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள தமிழக கோவில்களை மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரித்திட தனி வாரியம் அமைத்து அதற்கான வழிமுறைகள், நெறிமுறைகள், நிர்வாக அமைப்பு ஆகியவைகளை பரிந்துரை செய்திட நிபுணர் குழுவினை அமைத்திட கேட்டுக் கொள்வது, அறங்காவலர் குழு நியமனத்தில் அந்தந்த கோவில் ஸ்தலத்தார்களுக்கும், தீர்த்தக்காரர்களுக்கும் மற்றும் பொதுவான பிராமண சமூகத்தினருக்கும் தக்க பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், தமிழக திருக்கோயில்களில் நிரப்பப்படாமல் இருக்கின்ற அர்ச்சகர் சேவைக்கான காலியாக உள்ள இடங்களில் பரம்பரை அர்ச்சகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் என்.ஆர்.சங்கரன் நன்றி கூறினார்.



















