திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 1.1.2022 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60 ஆயிரத்து 856 பெண்கள், 91 திருநங்கைகள் உள்பட மொத்தம் 20 லட்சத்து 78 ஆயிரத்து 603 வாக்காளர்கள் உள்ளனர். அதனடிப்படையில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொலைதூரத்திலுள்ள வாக்குச்சாவடிகள் இடமாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2372 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதிவாரியாக திருவண்ணாமலை 296, செங்கம் 323, கலசபாக்கம் 281, கீழ்பென்னாத்தூர் 285, ஆரணி 311, போளூர் 285, வந்தவாசி 280, செய்யாறு 311 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. இந்நி¬யில் திருத்தியமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பட்டியலை கடந்த 14ந் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
அந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 20ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை எனவே வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் இடம்பெற்றிருந்த 282 வாக்குச்சாவடிகளும் உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கான இறுதிவாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டார். அப்போது பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.