ஆவடியில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டைக் கொடுத்து நடைப்பாதை பழ வியாபாரியிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து வியாபாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி, ஆக. 13 –
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி புதிய இராணுவ சாலையில் பழவியாபாரம் செய்து வருபவர் பாக்கியராஜ் வயது 45 அவர் வெகு நாட்களாக தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு அப்பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இன்று இரவு சிவா என்ற வாலிபர் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.500 நோட்டைக் கொடுத்து ரூ.100 க்கு பழம் வாங்கியுள்ளார்.
பழவியாபாரி பாக்கியராஜ் அந்த நோட்டின் மீது சந்தேகப்பட்டு அருகில் இருந்த மற்ற வியாபாரிகளிடம் காட்ட அவர்களுக்கும் அந்த நோட்டின் மீது சந்தேகம் எழுந்து சிவாவிடம் விசாரிக்க முன்னுக்குப் பின்னாக பதிலளித்துள்ளார். மேலும் அந்த நபர் கோபம் கொள்ள அவரை வியாபாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்நிலையத்தில் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணா விசாரணை நடத்தி அவரிடம் சோதனை செய்த தில் மேலும் அவரிடம் ரூ.2000 நோட்டுக்கள் 7 ம், ரூ.500 மதிப்பிலான நோட்டுக்கள் 20, ரூ.200 மதிப்பிலான நோட்டுக்கள் 6 என்ற வகையில் மொத்தம் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினார். மேலும் விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சிவா என்பதும் அவர் பெரம்பூர் கே.ஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவருக்கு இந்த நோட்டுக்களை கொடுத்தவர் சலீம் என்ற நபர் என்பதும் தெரிய வர சலீமை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி விரைந்துள்ளனர். தொடர்ந்து பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதற்கு பின்னால் வேறு கும்பல் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும், இதுவரை இவர்கள் எந்தெந்த பகுதிகளில் இது போன்று மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதுக் குறித்தும் விசாரணையை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் குறித்து அப் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் வியாபாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை சிறிது நேரம் ஏற்படுத்தியது.