திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்திலுள்ள பாறையில் எழுதப்பட்டிருந்த ஏழு வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆர்வலர்களான நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியர் ஜெயவேல் ஆங்கில பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் கண்டறிந்துள்ளனர். பின்னர் அந்த கல்வெட்டை அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தொல்லியல் ஆய்வாளருமான தியாகராஜன் ஆய்வு செய்து கூறியதாவது,
மதிரை கொண்ட பரகேசரி பரகேசரி வர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழன் கி.பி.907 முதல் 958 வரை ஆட்சி செய்தார். அவருடைய 35வது ஆட்சியாண்டில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. அதன்படி கி.பி.942 காலமாகும். 1078 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக காடிவாய் நாழி நெல் கொட்டப்பட்டதாக கல்வெட்டு வாசகங்கள் கூறுகின்றன. ராமசமுத்திரம் கிராமத்தின் பழைய பெயராக சாத்தனூர் இருக்கலாம். சமுத்திரம் என்ற சொல் பெரிய ஏரியை குறிக்கும் சொல்லாக விஜயநகர காலத்தில் மிகுந்த அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது. காடி என்ற சொல் தானிய மூட்டை அளவில் களம் என்ற அளவுக்கு இணையாக தொண்டை நாட்டில் புழக்கத்தில் இருந்தது. ஒரு களம் நெல் விளைந்தால் ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும் என்பதுதான் கல்வெட்டு வாசகத்தின் பொருளாகும் நாழி நெல் வீதம் ஒதுக்கி ஆணையிட்டவர் வைதும்ப பாடி பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவராவார். இந்த தர்மத்தை இரட்சித்தவர்களின் திருப்பாதம் என் தலைமேல் என்ற இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, எழுநூற்று காதம் செய்பவர்கள் பாவத்தில் போக கடவர்கள் என எழுதப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.