ராமநாதபுரம், அக். 15- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபரம் மாவட்டத்தில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புற பகுதிகளை துாய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் கொசுப்புழு ஒழிக்கும் பணிகளில் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகை தரும் நபர்கள் குறித்த விபரங்களை உடனுக்குடன் தலைமையிடத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும். பொது மக்களுக்கு காய்ச்சல் போன்ற அறி குறிகள் ஏற்பட்டால் பதற்றமடையாமல் உடனடியாக அருகுில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் சுயமாக மருந்துகளை உட்கொள்ளுதல் தவறானது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குனர் பிரதீப்குமார், சுகாதாரதுறை துணை இயக்குனர் குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொது சுகாதாரதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here