ராமநாதபுரம், ஜூலை 23- தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட எக்ககுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு செய்தார்.
எக்ககுடி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் கண்மாய் கரையை பலப்படுத்துதல், 4வது மடையினை மீளக்கட்டுதல் மற்றும் கலுங்குகளை பராமரித்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்மாயின் மூலம் 10 ஆயிரத்து 441 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர்.
ஆய்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்காள்ளப்படுகின்றன.
குறிப்பாக கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை துார் வாருதல் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை7 தேவைக்கேற்ப சீரமைத்தல், புதிததாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப் படுகின்றன. இப் புனரமைப்பு பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசதனதாரர் சங்கம் நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடன் 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச் சங்க பிரதி நிதிகளுக்கு குடிமராமத்து திட்டம் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் இக் குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்திற்கு ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2 மற்றும் 3 ம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கிட திட்டமிடப் பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது பொதுப் பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், ஆனந்த் பாபுஜி உட்பட அரசு அலுவலர்கள் எக்ககுடி கண்மாய் ஆயக் கட்டுதாரர் நலச் சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கிராம பொது மக்கள் உடனிருந்தனர்.