ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதியின்றி நடத்தப்படும் பார்கள் புற்றீசல் போல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ரோடுகளிலேயே பார் உருவாகிவிட்டது இது மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஊரின் வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் இருந்தன. தற்போது ராமநாதபுரத்தில் மட்டும் நகருக்குள் 7 டாஸ்மாக் மதுபான கடைகள் நடத்த டாஸ்மாக் அதிகாரி உத்தரவிட்டதின் பேரில் நகருக்குள் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடைபெறுகிறது. இந்த 7 டாஸ்மாக் மதுபான கடைகளில் புதிய பஸ் ஸ்டாண்ட் சிக்னல் அருகே உள்ள ஒரு கடை மட்டும்தான் பார் நடத்த முறையான அரசு அனுமதி பெற்றுள்ளது. இதற்காக அரசுக்கு உரிய கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தி நடத்துகிறது. இந்நிலையில், மற்ற 6 கடைகளில் பார் வசதி இல்லாததை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு திறந்தவெளி பார் மற்றும் கடைக்கு செல்லும் உள் வழியில் மினி பார் போன்றவைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு டாஸ்மாக் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு இருப்பதால் சட்டத்திற்கு புறம்பாக நடத்தும் பார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஸ் ஸ்டாண்ட், வண்டிக்கார தெரு போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே தனிநபர்கள் நடத்தும் பார்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி அரசு அனுமதியின்றி நடத்தும் பார்களால் அரசுக்கு மாதந்தோறும் பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை டாஸ்மாக் அதிகாரி கண்டு கொள்வது இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி நடத்தும் பார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் இதுபோன்ற அத்துமீறல்களை மதுவிலக்கு போலீசார், ஆயத்தீர்வை பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பார்களுக்கு சென்று அதிரடி ஆய்வு நடத்துவர். தற்போது இந்த ஆய்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் முற்றிலும் இல்லாத நிலை இருப்பது பார் நடத்துபவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது. மக்களுக்கு இடையூறாக உள்ள அனுமதியின்றி நடத்தப்படும் டாஸ்மாக் பார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை எஸ்பி தகுந்த நடவடிக்கஎடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.