திருவாரூர், ஜன. 06 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பழங்குடியினர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.8.31 இலட்சத்தில், ரூ.3.75 இலட்சம் தாட்கோவின் மானியத்துடன், ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் 28 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.157.14 இலட்சம் மொத்த தொகையில் ரூ.44.77 இலட்சம் தாட்கோ மானியமும்,
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.80.41 இலட்சம் மொத்த தொகையில் ரூ.21.60 இலட்சம் தாட்கோ மானியமும், மகளிர் சுய உதவிக்குழுக்களான பொருளாதாரக்கடன் திட்டத்தின் கீழ் 12 நபர்கள் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கறவை மாடுகள் வாங்கிட ரூ.6.00 இலட்சம் மொத்த தொகையில் ரூ.2.50 இலட்சம் தாட்கோ மானியம் என மேற்கண்ட பொருளதார மேம்பாட்டு திட்டங்களின்கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 இலட்சம் மொத்த தொகையில் ரூ.72.62 இலட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.