PIC FILE COPY
திருவண்ணாமலை.ஜூலை.25-
திருவண்ணாமலையில் 500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள கீழ்நாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக திருக்கோவில் வளாகத்தில் மிகப்பெரிய அளவில் கடந்த 22 ஆம் தேதி யாகசாலைகள் அமைக்கப்பட்டு மங்கள இசை, விநாயகர் பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது நேற்று சாந்தி ஹோமம், திசா ஹோமம், நவகிரக ஹோமம் என சிறப்பாக நடைபெற்று பூரணாஹ¨தியும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு யாகசாலையில் இருந்து கலசத்துடன் கூடிய புனித நீரானது கோவில் வளாகத்தினுள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கன்னியா லக்னத்தில் மூலஸ்தானத்திற்கு புனித நீரூற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதே நேரத்தில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீலட்சுமி மகா கணபதி, ஸ்ரீகால பைரவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கன்னியா லக்னத்தில் மூலஸ்தான கருவறை தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக புனித நீரூற்றி நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருவண்ணாமலை, ஏந்தல், நாச்சிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் டிஸ்கோ எஸ்.குணசேகரன், அண்ணாமலை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.




















