கும்பகோணம், பிப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர்.

மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து பேச்சியம்மன் சன்னதியும் உள்ளது மேலும் வடபகுதியில் பச்சை காளியம்மன் சன்னதியும் உள்ளது.

மாரி என்றால் மழை எனப்பொருள் கொள்ளும், அதுபோல் அவ்வாலயத்தில் அமர்ந்திருக்கும் படைவெட்டி மாரி அம்மன் மழையைத் தருபவள் எனவும் அழைக்கப்படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.

நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள் அகலும். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.

அச்சிறப்பு மிகு அவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாத திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 08 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்துடன் தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

மேலும் அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று ஸ்ரீ பச்சை, பத்ரகாளியம்மன் திருநடனம் வீதியுலா இன்று 18 ஆம் தேதி தொடங்கி வருகிற 23 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு, ஸ்ரீ பச்சை, பத்ரகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றி வைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலும்பிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் ஸ்ரீ பச்சை, பத்ரகாளியம்மனுக்கு தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அம்மன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர்.

அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, ஸ்ரீ பச்சை, பத்ரகாளியம்மன் தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஞானசேகரன், பாரி, சின்னகுட்டி, காளிதாஸ், அர்வின் குமார், மற்றும் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here