கும்பகோணம், பிப். 18 –

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் ராகு பகவான், மாசி மாத மகாசிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில், வழிப்பட்டு தன் சாபம் நீங்க பெற்றதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும் இத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு யாகத்துடன் 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து இன்றிரவு முழுவதும் விடிய விடிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது குறிப்பிடத் தக்கதாகும்.

திருநாகேஸ்வரத்தில் ராகு பகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார் எனவே இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி மாத மகாசிவராத்திரியன்று விடிய விடிய நாகநாதசுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது.

அதுபோலவே, இவ்வாண்டும், மகாசிவாராத்திரி தினமான இன்று சுவாமி, அம்மாள் ஆகியோருக்கு என இரு புனிதநீர் நிரப்பிய கடங்களை ஸ்தாபித்தும், 1008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி அதனை தரையில் பரப்பிய நெல் மணிகள் மீது வைத்து, அனைத்து சங்குகளுக்கும் சந்தன குங்கும பொட்டு இட்டு மலர்கள் சூட்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க விசேஷ யாகம் நடைபெற்று பின்னர் பூர்ணாஹதிக்கு பிறகு மகா தீபாராதணை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடங்கள் பிரகாரம் வழியே நாதஸ்வர மேளதாளம் முழங்க தாங்கி வர தொடர்ந்து இரு கடங்கள் மற்றும் 1008 சங்குகளில் உள்ள புனித நீரினை கொண்டும் நாகநாதசுவாமிக்கு மகா அபிஷேகம் செய்விக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து இன்றிரவு 3ம் காலத்தில் இராகுபகவான் பிரகார உலாவும், அதனை  தொடர்ந்து 4ம் காலத்தில் நாகநாதசுவாமி இராகுபகவானுக்கு காட்சி கொடுத்தல் வைபவமும் நடைபெறுகிறது.

மேலும், இதே போல கும்பகோணம் பகுதியில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,  அபிமுகேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர்  ஏகாம்பரேஸ்வரர், பாபநாசம் 108 சிவாலயம், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் இன்றிரவு மகாசிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here