பழவேற்காடு, மார்ச். 31 –
பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுக்குறித்து கடப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையைய்யும் எடுக்காததைக் கண்டித்து அவ்வூர் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிங்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆண்டார்மடம் பகுதி மழை வெள்ளத்தால் தனித்தீவாக துண்டிக்கப்பட்டது. கடப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆண்டார்மடம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து தற்காலிக தீர்வாக டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்தனர்.
இந்நிலையில் மீண்டும், குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. 5 நாட்களாகியும் பிரச்சனை சரி செய்யப்படாமலும் ஊராட்சி மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்கப்பட்டாமல் அலட்சியப்போக்குடன் இருப்பதை கண்டித்து, பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆண்டார்மடம் அருகே பழவேற்காடு பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் நீடித்த இந்த மறியலினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பாலைவனம் காவல் நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் இப்பிரச்சினைக் குறித்து உடனடி தீர்வு வழங்கப்படும் என்று அவர்கள் அளித்த உறுதியினை ஏற்று சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.























