விழுப்புரம், அக். 23 –
விழுப்புரம் பாரதியார் தெருவில் மருதூர் பால்வாடி பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமற்ற நிலையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. என அவ்வூர் பொதுமக்கள் புகார் எழுப்புகின்றனர். இது தொடர்பாக நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அப் பால்வாடி பள்ளிக்கு ஏழை எளியக் குடும்பத்தைச் சேர்ந்த கனிசமான எண்ணிக்கையில் குழந்தைகள் வருகைப் புரிகின்றனர். மேலும், தற்போதைய கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு தொடர் பருவ மழையின் காரணமாக ஏற்படும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படவும், பரவவும் வாய்ப்புள்ள சூழ்நிலையை கருதி அப்பகுதி மக்கள் அப்பள்ளியை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
அப்பள்ளியை சுற்றியுள்ள வெளிப்புரத்தில் சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதின் அச்சத்தால், தொடர் புகார்கள் அளித்த நிலையில் பெயரளவில் நகராட்சி தூய்மை பணியாளர்களும் மற்றும் அரசு அலுவலர்கள் காவல்துறையினர் வந்து சுத்தம் செய்து சென்றனர் இருப்பினும் அப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் தொற்று ஏற்படவும், அருகில் உள்ள உயர் மின்னழுத்தம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்ம் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழலும் உள்ளதைக் கவனத்தில் கொள்ளாமல் நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்விடத்தை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து மாற்று ஏற்படுகளை எடுத்திடவும், குழந்தைகளுக்கு ஏற்படயிருக்கும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதனைத் தடுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.