காஞ்சிபுரம், ஏப். 23 –

பாதி விலைக்கு கட்டுமான இரும்பு கம்பிகளை வாங்கித் தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான போலி பொறியாளரை தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் பரிதாபத்துடன் காத்திருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை  சேர்ந்தவர் அருண். அவருடைய சகோதரர் மோகன். இருவரும் சேர்ந்து லோடு வாகனம் சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வருகின்றார்கள்.

இந்நிலையில், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே ஜான் பாஷா என்பவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றார். ஜான் பாட்சாவின் இரும்புக் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜான் பாஷாவிடம், தான் இன்ஜினியர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ,எனக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அதிக பழக்கம் உண்டு, அதனைப் பயன்படுத்தி பாதி விலைக்கு இரும்புக் கம்பிகளை வாங்கித் தருகிறேன் என நம்பிக்கை தரும் வகையில் பேசி உள்ளார்.

அதனை நம்பிய ஜான் பாட்சா நாளை காலை கடைக்கு வாருங்கள் என கூறி மர்ம நபரை அனுப்பி உள்ளார். பிறகு வாடகை வாகனம் ஓட்டும் மோகனை அழைத்த ஜான் பாஷா,  இன்ஜினியர் ஒருவர் என் கடைக்கு வந்து விலை குறைவாக இரும்பு கம்பிகளை வாங்கி கொடுப்பதாக கூறி உள்ளார். எனவே நாளை காலை உன் தம்பி அருணை அனுப்புங்கள்,  20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்புகிறேன், இரும்பு கம்பியை வாங்கி வாருங்கள் என கூறியுள்ளார்.

அதன்படி இன்று காலை ஜான் பாட்சாவின் கடைக்கு வந்த அருணிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அளித்து அந்த இன்ஜினியரை அழைத்துச் சென்று இரும்பு கம்பிகளை வாங்கி வாருங்கள் என கூறியுள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இன்ஜினியரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ,பாலுசெட்டி சத்திரம் அருகே எட்டு வழி சாலைக்காக போடப்பட்டிருக்கும் ஜல்லி மணல் கற்கள் கொட்டியுள்ள பகுதியில் வாகனத்தை நிறுத்த சொல்லி அந்த என்ஜினியர் கூறியுள்ளார். மேலும் தனது செல்பேசியில் யாரையோ அழைத்த அந்த இன்ஜினியர், நான் பணம் மற்றும் வாகனத்துடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்து கொண்டு உள்ளேன்,  நீங்கள் கால தாமதம் செய்யாமல் 10mm, 12mm ,16mm  அளவிலான ராடுகளுக்கு ரசீது போட்டு வையுங்கள் என பேசி உள்ளார்.

அதன்பிறகு இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே வந்துள்ளனர். அருணிடம் பணத்தை வாங்கி கொண்ட அந்த இஞ்சினியர், வாகனத்துடன்  இங்கேயே காத்திரு, நான் பணத்தை கட்டிவிட்டு ரசீது வாங்கிக்கொண்டு வருகின்றேன் என கூறிவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்றுள்ளார்.

பணத்தை வாங்கி சென்ற அந்த இன்ஜினியர் மூன்று மணி நேரம் ஆகியும் வரவில்லை. அவர் வந்துவிடுவார் என சுமார் 3 மணி நேரம் காத்திருந்து ஏமாந்து போன அருண்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்த காவல்துறையினரிடம் தான் ஏமாந்த விபரத்தை கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று தேடிப்பார்த்து நொந்து போன அருண் ஆட்சியர் வளாகத்தின் வெளியே செய்வதறியாது , அந்த இன்ஜினியர் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இதுப் போன்ற நூதன மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக , மணல் வாங்கி தருகின்றேன், முதியோர் பென்சன் வாங்கி தருகின்றேன், தாலிக்கு தங்கம் வாங்கி தருகின்றேன் ,அரசாங்க வேலை வாங்கி தருகிறேன் என பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்  பின்வாசல் வழியாக தப்பி செல்லும் அந்த மர்ம நபர்களை பொறிவைத்து பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here