திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா விதி முறைகளை பின் பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மணவாளன் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரடி ஆய்வுக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறினார்.
திருவள்ளூர், செப். 1 –
கடந்த ஒன்றை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு மட்டும் எடுக்கப்பட்டு வந்திருந்தது,
இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறையை தொடங்கியதால், இன்று முதல் ஒன்பதாம் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தொழிற் பயிற்சிக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,
இந் நிலையில் திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் உள்ள நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகச் சென்று மாணவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாகவும், மாணவர்கள் கொரோனா விதி முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்,
அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1930 பள்ளிகள் இருப்பதாகவும் அதில் 762 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக இருப்பதாகவும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதால் அதில் 1 லட்சத்து 16 மாணவர்களும் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவிகள் சேர்த்து 2 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் இன்று பள்ளிக்கு நேரடி வகுப்புக்கு வந்துள்ளதாகவும், அனைத்து பள்ளிகளிலும் கொரோனா விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் மொத்தம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாகவும், அதில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்,
மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் 4000 பேரில் அதில் 3 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் கொரோனா விதி முறைகள் முறையாக கடைபிடிக்கப் படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 150 குழுக்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.