கும்பகோணம், ஜூன். 10 –
கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ. 450 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய அவ்வாலையில் இன்று கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது பணியைத் தொடங்க பூமிபூஜை செய்ததற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு. தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், எதிர்வரும் 15ஆம் தேதி அனைத்து கரும்பு விவசாயிகளையும் வரவழைத்து அவர்கள் பெயரில் என்னென்ன தொகை பாக்கி இருப்பது போன்ற விவரத்தை தெரிவிப்பதாக கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கும்பகோணம் அருகே கபிஸ்தலம் திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ. 100 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை வைத்திருந்த நிலையில் மேலும் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ரூ.300 கோடி கடனாக பெற்று விட்டு ஆலையை மூடிவிட்டது. என கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆலையில் கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் தனது பணியை தொடங்குவதற்காக இன்று இந்த ஆலையில் கணபதி ஹோமம் போன்றவற்றை நடத்தியது. இந்த தகவல் பரவியதும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் அங்கு கூடினர். எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுத்துவிட்டு நீங்கள் எந்த நிறுவன வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றும், பாக்கி உள்ள நிலையில் புதிதாக ஆலையை தொடங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் கரும்பு விவசாயிகள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கால்ஸ் நிறுவனத்திடம் விவசாயிகள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் தேதி சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு நிலுவை தொகை உள்ள விவசாயிகள் அனைவரையும் வரும்படி கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிமிட அழைப்பு விடுத்துள்ளது.
அன்றையதினம் ஒவ்வொரு விவசாயிகள் பெயரில் எவ்வளவு நிலுவைத்தொகை இருக்கிறது என்ற விவரத்தை தெரிவிப்பதாகவும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த கரும்பு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
பேட்டி 1) முனியசாமி. கால்ஸ் நிறுவன செயல் அலுவலர் .ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர். 2) செல்வம் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயி. திருமண்டங்குடி.






















