காஞ்சிபுரம், ஜூலை. 23 –
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்குளம் காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது வார்டில் அமைந்துள்ளது.
இந்த குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும், ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின்போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இத்திருக்குளத்தில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த திமுக ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவினையொட்டி இக்குளம் சீரமைக்கப்பட்டு அக்குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் அமரும் இருக்கை உள்ளிட்ட பணிகள் ரூ32.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த குளத்தில் நீத்தார் ஈமச் சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இச்சிறப்புமிக்க இத்திருக்குளத்தில் கழிவு நீர் கலந்தும் கழிவுப் பொருள்கள் இதில் மிதந்து வருவதனால் பக்தர்கள் நீராட இக்குளத்திற்கு செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதனைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி, தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை துவக்கினர். இதனைத் தொடர்ந்து ‘என் குப்பை.. என் பொறுப்பு..’ எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.
துவக்க விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகள் இருந்த கழிவுகள் அனைத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்திப் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா கணேஷ், நிர்மலா , அஸ்மாபேகம் நகராட்சி ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.