மீஞ்சூர், ஜூன். 21 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ஜெயின் கல்லூரி எதிரே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து ஆபத்துக்களை விளைவிக்கும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதுக்குறித்து மின்வாரியம் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் மின்வாரியத்துறை மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலூரிலிருந்து, திருவெள்ளைவாயல் துணை மின் நிலையத்திற்கு 11 கேவி உயர் மின்னழுத்த மின்சாரம், பெரிய கேபிள் வழியாக கேசவபுரம் பகுதியில் இருந்து மீஞ்சூர் ஜெயின் கல்லூரி வழியாக ரயில் தண்டவாளத்தினை கடந்திடும் வகையில், கம்பங்கள் அமைத்து கொண்டு செல்லும் படி அமைத்துள்ளனர். இந்நிலையில் அம்மின்கம்பங்கள் தற்போது மிகவும் சேதம் அடைந்த நிலையில், அக்கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே  தெரிந்தபடி காட்சியளிக்கின்றன.

மேலும் தற்போது பெய்து வரும் கன மழையாலும் மற்றும் இனி எதிர் வரும் மழைக் காலங்களில் வீசும் கணத்த காற்று மற்றும் மழையினால் மேலும் அம் மின் கம்பங்கள் சேதமடைந்து பெருத்த உயிர் மற்றும் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது வரை அவ்வழியாக செல்லும் கிராமத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் மழை நேரங்களிலும், பலத்த காற்று வீசும் நேரங்களிலும், மிகுந்த பயத்துடன் சென்று வருவதாக தெரிவிக்கின்றனர். இப் பிரச்சினைக் குறித்து மின்வாரியத்துறை அலுவலர்கள் உடனடியா விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் மின் கம்பங்களை மாற்றிட வேண்டுமென அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து இப்பிரச்சனைக் குறித்து பல்வேறு முறை மின்வாரிய ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here