தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது. அதனை முன்னிட்டு கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவகானம் இசைக்க சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் வாசிக்க, ஒதுவார்கள் திருமுறை ஒத நந்தி மண்டபம் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு அலங்கார தீபம் காட்டப்பட்டது. அக் கண்கொள்ளா காட்சியினைக் காண ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற விழாவிற்கு வருகை தந்து, மனமுருகி வழிப்பட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 22 ஆம் தேதி தீர்த்தவாரி நடைப்பெறுகிறது. மேலும் 23 ஆம் தேதி இவ்வாண்டிற்கான சித்திரை பெருவிழா இனிதே நிறைவுப் பெறுகிறது.