கும்பகோணம், ஏப். 21 –

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் ‌அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வழங்க சமைத்து வைத்திருந்த உணவின் தரமறிய சாப்பிட்டுப் பார்த்தார்.

தொடர்ந்து அருகிலுள்ள பழுதடைந்த மற்றொரு பால்வாடி பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பால்வாடியில் படித்து வரும் குழந்தைகளை இந்த கட்டிடத்தில் தங்க வைக்க கூடாது எனவும் குழந்தைகளை அருகிலுள்ள அரசு நூலக கட்டடத்திற்கு  உடனடியாக மாற்றம் செய்யவும் மேலும், அந்த கட்டிடத்தை உடன் மறுசீரமைப்புப்பணி செய்திடவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து  அருகிலிருந்த மேலுமொரு பழுதடைந்த அங்காடி கட்டிடத்தை பார்வையிட்டு உடனடியாக அதனையும் மறு சீரமைப்பு பணி நடத்திட உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் பொது விநியோக கிடங்கில் உணவுப்பொருள் இருப்பு மற்றும் தரத்தினை பார்வையிட்டும் அதுக்குறித்து கேட்டும் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வில் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் தங்க. பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஏரகரம் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி ரமேஷ்குமார், மற்றும் வருவாய் துறையினர், வேளாண்மைத் துறையினர், ஊராட்சி பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து முருகன் கோவிலில் அருகில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பொது வழியில் செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டுக்கொண்ட ஆட்சித்தலைவர் அதுக்குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here