உத்திரமேரூர், ஜன. 04 –
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான் தெருவில் உள்ள வீட்டில் நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
இந்நிலையில் இன்று இறுதி சடங்கிற்கு சென்ற பார்த்திபன் அளவுக்கதிமான வகையில் மது அருந்திவிட்டு சுயநிலை மறக்கும் நிலையில் போதையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்திருந்த பார்த்திபனின் உறவினர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜி என்பவருக்கும் பார்த்திபனுக்கும் குடிபோதை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவ் வாக்குவாதம் ஒருக் கட்டத்தில் முற்றியதைத் தொடர்ந்து, ராஜி பார்த்திபனின் கழுத்தில் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய பார்த்திபன் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜி அங்கிருந்து தப்பித்து ஓடியதாக தெரிய வருகிறது. இத்தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜூவை தேடி வருகின்றனர்.