செங்கல்பட்டு, மே. 24 –
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு பாடலாத்ரி ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் வைகாசிப் பெருவிழா இன்று காலை 5.30 மணிக்கு மேல், மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், மிகச்சிறப்பாக கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் துவங்கியது.
மேலும் இத்திருக்கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், பல்லவர்கால குடைவரைக்கோவிலாகும், இவ்வைகாசி பெருவிழா இன்று 24 ஆம் துவங்கி அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் அப்பகுதி முழுவதும் ஜொலிக்கிறது.
இவ்விழாவினை முன்னிட்டு தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் பத்கர்களுக்கு அருள்பாலிக்கும் சுவாமி பெருமாள், 30 ஆம் தேதி திருத்தேரில் எழுந்தருளும் உற்சவ விழா நடைபெறவுள்ளது.
முதல் நாள் நடைபெற்ற பிரம்மோற்சவம் திருவிழாவில் பெருமாள் அதிக நகைகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இப் பிரமோற்ச விழா இத்திருக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிலும் கோவில் மேலாளர் தமிழ் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் பொது மக்கள் என திரளானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.