பூந்தமல்லி, மார்ச். 12 –

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம் என்ற சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலத்தில் அமைந்திருந்தது. இந்தக் குளம். பொதுமக்கள் மட்டுமன்றி ஆடு மாடுகள், பறவைகள் தண்ணீர் பருகவும் இந்த குளம் பயன்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் சிலரின் சுயலாபத்துக்காக இந்தக் குளம் மண் கொட்டி மூடப்பட்டது.

இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக மண் கொட்டி மூடப்பட்ட குளத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரிடம் அகரம் மேல் கிராம திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து குளத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர் நாசர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி ஒன்றிய துணை பெருந்தலைவர் பரமேஷ்வரி கந்தன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் அங்கு பார்வையிட்டு உடனடியாக 2 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மூடப்பட்ட குளம் தோண்டப்பட்டது. இது குறித்து துணை தலைவர் பரமேஷ்வரி கந்தன் கூறுகையில்

முழுமையாக குளம் தோண்டி, தூர்வாரப்பட்டு, தண்ணீர் சேமிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த குளத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அதே போல் குளத்தை மீட்டியதற்காக பொதுமக்களும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here