கும்பகோணம், ஆக. 15 –
இன்று நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினவிழாவை அரசு மற்றும் பல்வேறு கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சமூதாய விழிப்புணர்வு இயக்கங்கள், ஆகிய அனைவரின் சார்பில் பள்ளிக்கல்லூரி மற்றும் பொதுத்துறை, தொழிற்சாலை மற்றும் பொதுயிடங்கள் என்றவாறு அனைத்துயிடங்களிலும் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து அதற்கு மரியாதை செலுத்தியப் பின்பு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் 77 வது சுதந்திர தின விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலை அமைப்பு ஒராண்டு நிறைவு விழா, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
.இதில் 8 வது என்.சி.சி பட்டாலியன் கர்னல் .எஸ். சந்திரசேகரன் தேசிய கொடியை ஏற்றிய போது, அத் தேசிய கொடி நாடா இல்லாமல் திடிரென்று கீழே விழுந்தது அப்போது அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், முதன்மை சார்பு நீதிபதி ஆகியோர் பதட்டம் அடைந்தனர்.
அப்போது விழா நடத்தும் அலுவலர்களை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அடிக்க கையை ஓங்கி கடுமையாக திட்டியதின் விளைவாக அவ்விடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, அருகில் பறந்த தேசிய கொடியை எடுத்து வந்து 2 வது முறையாக கர்னல் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு ராமகிருஷ்ண மடம் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, திருவள்ளுவர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஓவியங்களை டைப்போகிராபிக் முறையில் வரைந்து சாதித்த திருபுவனம் பிளஸ் 1 படிக்கும் மாணவி சங்கமித்ராவை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ. 10 ஆயிரம் பணம் முடிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவிகளின் சுதந்திர தின சிறப்பு பரத நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழாவில் போர்ட்டர் டவுன் ஹால் கிளப் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சங்கம் உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டனர்.