திருவேற்காடு, ஜன. 23 –

ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப் படத்தை அவரது செல்போனில் பதிவு செய்த தைத் தொடர்ந்து, அந்நபரை எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரீனா கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியான மேல அயனம்பாக்கத்தில் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் இணைப்பு பள்ளி இப்பகுதியில் இயங்கி வருகிறது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வெங்கடசுப்பு என்பவரின் மனைவியான சியமளாசுப்பு என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் சென்னை, திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகன் 21 வயது நிரம்பிய சசிகுமார் என்கின்ற எட்வின், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் கல்வி பயின்று வரும் மாணவி ஒருவரிடம் தொடர்ந்து வெகு நேரமாக பேசி வந்துள்ளார். அப்போது அதனைக் கண்ட பள்ளித்தலைமை ஆசிரியர் சியமளாசுப்பு அந்நபரை கூப்பிட்டு விசாரிக்கும் போது, சற்றுத் தடுமாற்றத்துடன் அவர் பேசியதைத் தொடர்ந்து, தலைமையாசிரியர் சசிகுமாரின் செல்போனை வாங்கிப் பார்த்த போது அதில் அம் மாணவியின் ஆபாசப்படங்களை பதிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் சியமளா சுப்பு அப்பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரீனாவிடம் இதுக் குறித்து புகார் மனு அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் சசிகுமார் என்கின்ற எட்வின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சசிகுமார் என்கின்ற எட்வினை கைது செய்து, அவரிடம் இருந்து கைப் பேசியையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அந்நபரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுப்பட்ட சசிகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய ஆய்வாளர் ரீனாவை ஆவடி காவல் ஆணையரகம் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாரட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here